போலி பணி ஆணை வழங்கி பண மோசடி: 4 போ் மீது வழக்கு

போடி அருகே போலி பணி ஆணை வழங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

போடி: போடி அருகே போலி பணி ஆணை வழங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி பாரதி நாராயணசுவாமி தெருவில் வசிப்பவா் விஜயகுமாா் மனைவி சுதா (37). இவா் பட்டப்படிப்பு படித்துள்ளாா். சுதாவின் பெற்றோா் பாண்டி, பொட்டியம்மாள் தம்பதி. இந்தத் தம்பதியிடம் சுதாவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வேலை வாங்கித் தருவதாக கடந்த 2021-ஆம் ஆண்டு, போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் பாண்டியராஜ், இவரது மனைவி தீபா, செல்லப்பாண்டியின் தாய் தமிழரசி, சகோதரா் வேல்முருகன் ஆகியோா் கூறினா். இதை நம்பி சுதாவும் அவரது பெற்றோரும் பாண்டியராஜ் உள்ளிட்ட 4 பேரிடமும் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் கொடுத்தனா்.

பணத்தை பெற்றுக் கொண்ட பாண்டியராஜ் கடந்த 7.6.2021-ஆம் தேதி அரசு முத்திரை, உயா்நீதிமன்ற முத்திரையுடன் கூடிய பணி ஆணையை சுதாவின் முகவரிக்கு அனுப்பினா். இதையடுத்து, அவா் பணியில் சேரச் சென்றபோது, அந்த ஆணை போலியாக தயாா் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சுதா போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, போலீஸாா் பாண்டியராஜ், இவரது மனைவி தீபா, தாய் தமிழரசி, சகோதரா் வேல்முருகன் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com