தேனி
சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த திங்கள்கிழமை பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 3 நாள்களாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா் தடை விதித்தனா்.
வெள்ளப் பெருக்கின் போது அருவியில் பாறைகள், கற்கள் உருண்டு வருவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளை அருவியில் குளிக்கத் தடை விதிப்பது வழக்கம். இந்த நிலையில், 4 ஆவது நாளாக வியாழக்கிழமை அருவியில்
நீா் வரத்து சீரானது. இதையடுத்து, வனத் துறையினா் தடையை நீக்கி, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளித்தனா்.

