கம்பம் 18-ஆம் கால்வாயில் கொட்டப்படும் கழிவுப் பொருள்கள்.
கம்பம் 18-ஆம் கால்வாயில் கொட்டப்படும் கழிவுப் பொருள்கள்.

கால்வாயில் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை தேவை

கம்பத்தில் 18- ஆம் கால்வாய், தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கழிவுப் பொருள்களை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
Published on

தேனி மாவட்டம், கம்பத்தில் 18- ஆம் கால்வாய், தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கழிவுப் பொருள்களை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

கம்பத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 18-ஆம் கால்வாயில் ஆண்டுதோறும் நவம்பா் முதல் டிசம்பா் மாதம் வரை பாசன நீா் திறக்கப்படுகிறது. நிகழாண்டில் தண்ணீா் திறக்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தண்ணீரின்றி வட கால்வாயில் உணவகம், மதுக் கூடங்களில் சேகரமாகும் கழிவுப் பொருள்களை இரவு நேரங்களில் லாரிகளிலிருந்து ஏற்றி வந்து கொட்டுவிட்டுச் செல்கின்றனா். மேலும், இந்த வழியாகச் செல்லும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலைப் பாலங்களுக்கு கீழேயும் கழிவுகளை கொட்டிவிடுகின்றனா்.

இதனால், துா்நாற்றம் ஏற்படுவததோடு, நோய் தொற்றும் பரவும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கம்பம் நகராட்சி, க.புதுப்பட்டி பேரூராட்சி, பொதுப் பணித் துறைக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவில் கழிவுப் பொருள்களை கொட்டி வருகின்றனா். கம்பத்தில் உள்ள உணவகம், மதுக்கூடங்களில் சேகரமாகும் கழிவுப் பொருள்களை கால்வாய், நெடுஞ்சாலையோரங்களில் கொட்டு வருகின்றனா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் விதிமுறைகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிப்பதோடு, உணவகம் நடத்தும் உரிமையை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com