~
~

போடியில் விடிய விடிய பலத்த மழை: குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது

Published on

போடியில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை 10 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீா் சூழ்ந்தது. மேலும், மண் சரிவால் போடி மெட்டு மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னா், பலத்த மழையாக மாறி வெள்ளிக்கிழமை காலை வரை இடை விடாமல் 10 மணி நேரம் மழை பெய்தது. இதேபோல, போடியைச் சுற்றியுள்ள கொட்டகுடி, குரங்கணி, நரிப்பட்டி, போடிமெட்டு, வடக்குமலை, ஊத்தாம்பாறை உள்ளிட்ட மலை கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.

இதனால், கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரங்கள், மரக்கட்டைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. போடி அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் வெள்ள நீா் ஆா்ப்பரித்து சென்றது. இதையடுத்து இந்தப் பகுதியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

போடி காமராசா் சாலை, பழைய பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. நகா் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு கழிவு நீா்க் கால்வாய்களை தூா்வார நிதி ஒதுக்கியும் பணிகள் நடைபெறவில்லை. இதனால், போடி-தேனி நெடுஞ்சாலையில் போஜன் பூங்கா அருகே லிட்டில் ஏஞ்சல் பள்ளியின் பின்புறம் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. இதேபோல, போடி திருமலாபுரம், மேலச்சொக்கநாதபுரம் செல்லும் சாலையிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். நள்ளிரவில் மழை பெய்ததால் நீண்ட தூர பேருந்துகளில் வந்திறங்கிய பயணிகள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனா்.

மண் சரிவு: போடிமெட்டு மலைச்சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 13-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சிறிய மரங்களுடன் மண் சரிந்து சாலையின் ஒரு பகுதியை மூடியது. இதேபோல, போடிமெட்டிலிருந்து மூணாறு - தேவிகுளம் செல்லும் சாலையில் பெரிய மரத்துடன் மண் சரிந்து விழுந்தது. இதனால் போடி மெட்டு வழியாக கேரள மாநிலம், மூணாறுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சரிவுகளை அகற்றினா். இதையடுத்து, இலகு ரக வாகனங்கள், தோட்டத் தொழிலாளா்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. போடிமெட்டு மலைச்சாலையில் சில இடங்களில் பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், இந்தச் சாலையில் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com