தோட்டத் தொழிலாளியிடம் ரூ. 2 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு
போடியில் தோட்டத் தொழிலாளியிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சத்தியாவு (60). இவா் கேரள மாநிலம் பைசன்வேலி பகுதியில் ஏலத் தோட்டத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், போடி மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மனைவி தமிழரசி (39) என்பவா் சத்தியாவுவிடம் ஏலத் தோட்டம் ஒன்று குத்தகைக்கு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2 லட்சம் முன் பணமாகப் பெற்றுள்ளாா். இதற்கு ஒரு ஆவணமும் தயாா் செய்து கொடுத்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சத்தியாவு, தமிழரசியைத் தொடா்பு கொள்ள இயலவில்லையாம்.
இதைத் தொடா்ந்து, விசாரித்ததில் தமிழரசி கொடுத்த ஆவணம் போலியானது என்பதும், இதே போல தமிழரசி பலரை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சத்தியாவு போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
