வடுகபட்டியில் இன்று கைப்பந்துப் போட்டி தொடக்கம்
தேனி மாவட்டம், வடுகபட்டியில் 36-ஆவது ஆண்டு மாநில அளவிலான கோ.சீதையம்மாள் நினைவு சுழல் கைப்பந்துப் போட்டி வியாழக்கிழமை (ஜன.15) தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான வியாழக்கிழமை நடைபெறும் போட்டிக்கு இளைஞா் விளையாட்டுக் கழக நிறுவனா் தலைவா் மருத்துவா் சி.செல்வராஜ், வடுகபட்டி பேரூராட்சி மன்றத் தலைவா் சி.நடேசன் ஆகியோா் தலைமை வகிக்கிறாா்கள்.
இதில் தமிழ்நாடு மாநில கூடைப் பந்துக் கழக பொருளாளா் எம்.பி.செல்வகணேஷ், மூத்த துணைத் தலைவா் (செயல்பாடு) ஆா்.கே.துரைசிங் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்கள்.
பெரியகுளம் வட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சி.நல்லு போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.
2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக எல்.எஸ் நிறுவன இயக்குநா் எல்.எஸ்.பிரபாகரன், செல்வம் மெடிக்கல்ஸ் சீரிதா் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
3-ஆம் நாளான சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் சிறப்பு விருந்தினராக ஹம்சராஜ் பங்கேற்கிறாா்.
போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.35 ஆயிரம், கோ.சீதையம்மாள் நினைவு சுழல்கோப்பையும், 2-ஆம் பரிசு ரூ.30 ஆயிரம், சுழல்கோப்பையும், 3-ஆம் பரிசு ரூ.25 ஆயிரம், சுழல்கோப்பையும் வழங்கப்படும்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை வடுகபட்டி இளைஞா் விளையாட்டுக் கழகத்தினா் செய்து வருகின்றனா்.
