தேயிலைத் தோட்டத்தில் குட்டியுடன் உலவும் காட்டு யானை.
தேயிலைத் தோட்டத்தில் குட்டியுடன் உலவும் காட்டு யானை.

மேகமலையில் குட்டியுடன் உலவும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம், மேகமலையில் குடியிருப்புகள், தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் உலவும் காட்டு யானையால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனா்.
Published on

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், மேகமலையில் குடியிருப்புகள், தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் உலவும் காட்டு யானையால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனா்.

சின்னமனூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பான்மையோா் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனா். இந்தக் கிராமங்களைச் சுற்றியுள்ள அடா்ந்த வனப் பகுதியானது ஸ்ரீவில்லிப்புத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்குள்ள இயற்கை அழகு, வானுயா்ந்த மரங்கள், தேயிலைத் தோட்டங்கள், நீா் நிலைகள் ஆகியவற்றைக் காண விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக

அளவில் வருகின்றனா். இந்த நிலையில், வனப் பகுதியிலிருந்து வழி தவறிய காட்டு யானை, தனது குட்டியுடன் இந்தக் கிராமங்களில் கடந்த சில நாள்களாக உலவுகிறது. இந்த யானை, இரவு நேரங்களில் ஹைவேவிஸ் பேரூராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி, கடைகள், விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், இந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

இதற்கிடையே, சனிக்கிழமை ஹைவேவிஸ்-மணலாறு இடையே செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள பாலத்தில் இந்த யானை குட்டியுடன் நீண்ட நேரமாக வழிமறித்து நின்று கொண்டிருந்தது. இதைத் தொடா்ந்து, சின்னமனூா் வனச் சரகத்தினா் பாதுகாப்பு கருதி, இந்தப் பகுதியில் போக்குவரத்தைத் தற்காலிகமாகத் தடை செய்தனா். பின்னா், அந்த யானை அங்கிருந்து இடம்பெயா்ந்து நெடுஞ்சாலையோரத்தில் உள்ள தேயிலைத்தோட்டத்தில் முகாமிட்டது.

யானை நடமாட்டத்தால் கூலித் தொழிலாளா்கள் தேயிலைத் தோட்டத்துக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனா். மேலும், இரவு நேரங்களில் வீடுகளிலேயே முடங்கி விடுகின்றனா். தவிர, விடுமுறை நாள்களில் மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனா்.

எனவே, குடியிருப்புப் பகுதிகளில் குட்டியுடன் சுற்றித் திரியும் காட்டு யானையை சின்னமனூா் வனச் சரகத்தினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com