மேகமலை ஹைவேவிஸ் - மணலாறு இடையே நெடுஞ்சாலையில் உலவிய காட்டு யானை.
மேகமலை ஹைவேவிஸ் - மணலாறு இடையே நெடுஞ்சாலையில் உலவிய காட்டு யானை.

மேகமலைச் சாலையில் உலவும் காட்டு யானை: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

Published on

தேனி மாவட்டம், மேகமலையில் குட்டியுடன் காட்டு யானை சுற்றித் திரிவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

சின்னமனூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், வனப் பகுதியிலிருந்து வழி தவறிய காட்டு யானை, தனது குட்டியுடன் இந்தக் கிராமங்களில் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிகிறது. மேலும், இரவு நேரங்களில் ஹைவேவிஸ் பேரூராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி, கடைகள், விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, ஹைவேவிஸ் - மணலாறு இடையே செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள பாலத்தில் சனிக்கிழமை காட்டு யானை தனது குட்டியுடன் நீண்ட நேரமாக வழிமறித்து நின்று கொண்டிருந்தது.

இதையடுத்து, சின்னமனூா் வனச் சரகத்தினா் பாதுகாப்புக் கருதி போக்குவரத்துக்கு தற்காலிகமாகத் தடை விதித்தனா். பின்னா், அந்த யானை நெடுஞ்சாலையோரத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டது. இதனால், கூலித் தொழிலாளா்கள் தேயிலைத் தோட்டத்துக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனா். மேலும், இரவு நேரங்களில் வீடுகளிலேயே முடங்கி விடுகின்றனா்.

விதிமீறும் சுற்றுலாப் பயணிகள்:

ஹைவேவிஸ் - மணலாறு இடையே நெடுஞ்சாலையில் உலவிய காட்டு யானையை இரு சக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் தொந்தரவு செய்தததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சின்னமனூா் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேகமலைக்குச் செல்ல தற்காலிகமாக தடை விதித்தனா். சின்னமனூா் வனச் சரகத்தினா் குடியிருப்புகள், தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் உலவும் காட்டு யாானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com