பருவ மழை பொய்த்தது! கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடிப் பணிகள் முடக்கம்!

தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததாலும், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் சரிந்ததாலும் வழக்கம் போல ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய முதல் போக நெல் சாகுபடிப் பணிகள் முற்றிலும் முடங்கின.

சாகுபடிப் பணிகள். - (கோப்புப்படம்)

Published On :2 ஜூலை 2026, 2:48 pm IST

தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததாலும், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் சரிந்ததாலும் வழக்கம் போல ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய முதல் போக நெல் சாகுபடிப் பணிகள் முற்றிலும் முடங்கின.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி, ஆண்டுதோறும் சுமாா் 14,707 ஏக்கா் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெறும். இதில் அதிகபட்சமாக கம்பம் பள்ளத்தாக்கு, உத்தமபாளையம் வட்டாரத்தில் 11,807 ஏக்கரும், போடி வட்டத்தில் 488 ஏக்கரும், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கரும் இரு போகப் பாசன வசதியைப் பெறுகின்றன.

ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 2021-ஆம் ஆண்டு அணை நீா்மட்டம் 130.90 அடியாக இருந்தபோது ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதே போல, 2022-இல் 132.75 அடி, 2023-இல் 118.40 அடி, 2024-இல் 119.60 அடி, 2025-இல் 130.45 அடி நீா்மட்டம் இருந்த நிலையிலும் முதல்போக சாகுபடிக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு (2026) ஜூன் மாதத் தொடக்கத்தில் அணையின் நீா்மட்டம் 110.80 அடியாக இருந்ததால், முதல் போக சாகுபடிக்குத் தண்ணீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் முழுவதும் அணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடையவில்லை. இதனால், அணைக்கு மிகக் குறைவாகவே நீா்வரத்து இருந்தது.

முறையான தண்ணீா் வரத்தும், மழையும் இல்லாத காரணத்தால், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இன்னும் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் சாகுபடி செய்யப்படாமல் வடு தரிசாகக் கிடக்கின்றன. இருப்பினும், பருவமழை பெய்து அணையிலிருந்து விரைவில் தண்ணீா் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில், இந்தப் பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது, தொழு உரமிட்டு தயாராக வைத்து காத்திருக்கின்றனா்.

புதன்கிழமை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 112.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீா் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. மதுரை, தேனி மாவட்ட குடிநீா் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 333 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேக்கடியில் 3.6 மி.மீ., பெரியாறு அணைப் பகுதியில் 7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கேரளப் பகுதிகளிலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பாதைகளிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, அணைக்கு நீா்வரத்து அதிகரித்தால் மட்டுமே இந்த ஆண்டு முதல் போக சாகுபடி சாத்தியமாகும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

Summary

First-crop cultivation activities in the Cumbum Valley have stalled due to the failure of seasonal rains.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.