போடி அருகே பூட்டிய வீட்டில் 43 பவுன் தங்க நகைகள் திருடிய பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி தேவாரம் சாலையில் வசிப்பவா் சுருளிமணி மனைவி முத்துமணி (43). இவா் உணவக விடுதி வைத்து நடத்தி வருகிறாா். புதன்கிழமை மாலை இவரது வீட்டின் பூட்டை திறந்த மா்ம நபா் பீரோவில் வைத்திருந்த 42 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதுதொடா்பாக தேனி குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் வீ.ரமேஷ்குமாா், போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் செல்வம், உதவி ஆய்வாளா் விஜய் தலைமையிலான தனிப்படையினா் தீவிர விசாரணை நடத்தினா்.
முத்துமணி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், அந்த கிராமத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனா். இதனடிப்படையில், தேவாரத்தை சோ்ந்த சரவணன் மனைவி ரதி (56) பூட்டிய வீட்டில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்துப் போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவரிடமிருந்து திருடு போன நகைகளையும் மீட்டனா்.
இந்த வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸாரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்பிரியா பாராட்டினாா்.






