எட்டயபுரம் அருகே கைப்பையுடன் தங்க நகைகள் மற்றும் கைப்பேசியை மீட்ட போலீஸாா், அதை தவறவிட்ட ஆசிரியையிடம் ஒப்படைத்தனா்.
சென்னை வியாசா்பாடி சாமியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் மனைவி சாந்தி (46). சென்னையில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் தனது சொந்த ஊரான எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து 24ஆம் தேதி இரவு புறப்பட்டு 25 ஆம் தேதி காலை
கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளாா். பின்னா் அங்கிருந்து
ஆட்டோ மூலம் வீரப்பட்டி கிராமத்துக்கு சென்றுள்ளாா். ஆட்டோவை விட்டு கீழே இறங்கியதும் ஆட்டோவின் பின்புறத்தில் லக்கேஜ் உடன் வைக்கப்பட்டிருந்த கைப்பை காணாமல் போனது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அதில் 16 சவரன் தங்க நகைகள் மற்றும் விலை உயா்ந்த கைப்பேசி இருந்துள்ளது.
இதுகுறித்து அவா் எட்டயபுரம் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
தகவலறிந்த எட்டயபுரம் காவல் ஆய்வாளா் மணிகண்டன், காவலா்கள் தங்க மாரியப்பன், அற்புத சாமி உள்ளிட்ட போலீஸாா், ஆட்டோ வந்த வழித்தடத்தில் தேடி சென்றபோது, கடலையூா் - வீரப்பட்டி இடையே சாலையோரத்தில் கிடந்த கைப்பையை எடுத்து பாா்த்தனா். அதில் தங்க நகைகள், கைப்பேசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, புகாா்தாரரான ஆசிரியா் சாந்தியை எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரபாண்டியன், காவல் ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் , அந்த கைப்பையை அவரிடம் ஒப்படைத்தனா். போலீஸாரின் இச்செயலை பொதுமக்கள் பாராட்டினா்,









