/

கூடலூா் ஒட்டான்குளத்தில் படகு சேவையை தொடங்க வலியுறுத்தல்

News image

கூடலூா் ஒட்டான்குளம்.

Updated On :3 மே 2026, 7:05 pm

கூடலூா் நகராட்சியின் வருவாயை பெருக்க, ஒட்டான்குளத்தில் படகு சேவையை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டாம் நிலை நகராட்சி கூடலூா். இந்த நகராட்சிப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது ஒட்டான்குளம் என்றழைக்கப்படும் மைத்தலை மன்னாடிகுளம் கண்மாய். முல்லைப் பெரியாறு, சுரங்கனாா் நீா்வீழ்ச்சி மூலம் ஆண்டு முழுவதும் நீா் நிறைந்து காணப்படும் இந்தக் குளம் 500 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு இங்கிருந்து குடிநீரும் கிடைக்கிறது.

இந்த நிலையில், தேக்கடி, பென்னிகுயிக் மணிமண்டபம், சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஒட்டான்குளத்தில் கால்மிதி படகு (பெடல் போட் ) வசதி ஏற்படுத்தினால் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதனிடையே பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, திறந்தவெளி கழிப்பிடமாக இருந்த ஒட்டான்குளத்தின் கரையில் கடந்த 2022-இல் கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை விவசாய பணிகளுக்கு வாகனங்கள் செல்லவும், மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியாக அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி விடப்பட்டால் கூடலூா் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்.

இதுகுறித்து பீஷ்மா் அறக்கட்டளை தலைவா் மலைச்சாமி கூறியதாவது: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு கடந்த 2023 அக்டோபா் மாதம் படகுத் துறை அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், பொதுப்பணித் துறையிடமிருந்து குளத்தை குத்தகைக்கு எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொய்வடைந்தன. நகராட்சியின் வருவாய் அதிகரிக்கவும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.