கூடலூா் நகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கூடலூா் நகராட்சியின் 21 வாா்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கருநாக்கமுத்தன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றிலிருந்து குடிநீா் பெறும் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, நகராட்சி சாா்பில் ரூ.50 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இடம் தோ்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கூடலூா் நகராட்சியின் 8-ஆவது வாா்டு காந்திகிராமம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இருப்பினும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
நகராட்சி மேலாளா் அய்யப்பசாமி, பொறியாளா் கிஷோா் குமாா் சிங், சுகாதார ஆய்வாளா் ஜெயசீலன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து 3 நாள்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

பஞ்சப்பூரில் ரூ. 233 கோடியில் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை பயன்படுத்தும் பொதுமக்கள்: எச்சரிக்கை பலகைகள் வைக்க வலியுறுத்தல்

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்







