ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் நீர்வரத்து ஓடைகள் தூர்வாரும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும் என்றார் அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து செயல்படுத்த சட்டப்பேரவை உறுப்பினர் முடிவு செய்தார். இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் வளர்ச்சி இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.இதன் மூலம் நகரில் உள்ள நீர்வரத்துப் பகுதிகள் தூர்வாரும் பணியை புதன்கிழமை பெரும்பள்சேரியில் தொடங்கி வைத்து எம்எல்ஏ சந்திரபிரபா பேசுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வடமலைக்குறிச்சி கண்மாய் முதல் செங்குளம் வரையிலும், பெரியகுளம் கண்மாய் முதல் லைலாப்பேரி கண்மாய் வரையிலும் 2 நீர்வரத்து ஓடைகள் உள்ளன. இந்த ஓடைகளில் நீர் செல்ல தடையாக முட்புதர்களும், செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் வடமலைக்குறிச்சி கண்மாய், செங்குளம் கண்மாய், லைலாப்பேரி கண்மாய்களுக்கு தடையின்றி நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட ஏதுவாக உள்ளது. மேலும் மழைநீர் ஊருக்குள் புகும் அபாயமும் இருந்து வந்தது. இதனால் இந்த இரண்டு நீர் வரத்து ஓடைகளை தூர்வாரி, கழிவுகளை வெளியேற்றி அந்த நீர் கண்மாய்களுக்கு தடையின்றி செல்ல வேண்டிய பணிகளை இந்த அமைப்பு ஏற்று நடத்துகிறது. மழை காலம் வருவதை கருத்தில் கொண்டு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் இயக்கத்தின் சிறப்பு ஆலோசகர் த. முத்தையா, நகராட்சி ஆணையாளர் டி.எம். முகம்மது மைதீன், நகர் நல அலுவலர் டாக்டர் மா. சரோஜா, பொறியாளர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் கோமதிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.