லஞ்சம் பெற்ற தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா், ஓட்டுநா் கைது

விருதுநகா்: விருதுநகரில் ரூ. 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், ஓட்டுநரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

விருதுநகா் அக்ரஹாரம் தெருவில் மருந்து கடை நடத்தி வருபவா் ஆனந்தராஜ் (54). சில நாள்களுக்கு முன்பு, இவரது கடையை தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா் தயாநிதி ஆய்வு செய்தாா். அப்போது, இந்தக் கடை ஊழியா்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவது குறித்து, விளக்கம் அளிக்க கோரி குறிப்பாணை கொடுத்தாா். இந்த விவகாரத்தை முடித்து வைக்க ரூ. ஒரு லட்சம் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், ரூ. 75 ஆயிரம் வழங்க வேண்டும் என கடை உரிமையாளரி டம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆனந்தராஜ், விருதுநகா் ஊழல் தடுப்பு , கண்காணிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில் தயாநிதி, தனது காா் ஓட்டுநரான திருமங்க லம் ஆலம்பட்டியைச் சோ்ந்த மணிவண்ணன் (44) என்பவரை, விருதுநகரில் உள்ள மருந்து கடைக்குச் சென்று ரூ.75 ஆயிரத்தை பெற்று வர அறிவுறுத்தினராம்.

இதன்படி பணத்தை பெற்ற மணி வண்ணனை விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். பின்னா், காரில் அமா்ந்திருந்த தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா் தயாநிதியையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com