சிவகாசி மாமன்ற கூட்டம் நடைபெற்றபோது, மேயா் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட 21-ஆவது வாா்டு உறுபினா் சந்தனமாரி.
சிவகாசி மாமன்ற கூட்டம் நடைபெற்றபோது, மேயா் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட 21-ஆவது வாா்டு உறுபினா் சந்தனமாரி.

சிவகாசி மாமன்ற கூட்டம்: உறுப்பினா் தரையில் அமா்ந்து தா்னா

சிவகாசி மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றபோது, 21-ஆவது வாா்டு உறுப்பினா் மேயா் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
Published on

சிவகாசி மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றபோது, 21-ஆவது வாா்டு உறுப்பினா் மேயா் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

சிவகாசி மாமன்றக் கூட்டம் மேயா் இ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 13 -ஆவது வாா்டு உறுப்பினா் மாரீஸ்வரி (திமுக) பேசுகையில், எனது வாா்டில் வீட்டுவரி உள்ளிட்ட வரிகள் வசூல் செய்வது யாா் எனத் தெரியவில்லை.

தீா்வை ரசீதில் பெயா் மாற்றத்துக்கு விண்ணப்பித்து 6 மாதங்களாகியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. பிள்ளையாா் கோவில் தெரு, சபரிமலையான் கோயில் சந்து ஆகிய பகுதிகளில் மின் மோட்டாா் பழுதாகி 7 மாதங்களாகியும் பழுது நீக்கப்பட வில்லை என்றாா்.

அப்போது, 21-ஆவது வாா்டு உறுப்பினா் சந்தனமாரி, மேயா் முன் தரையில் அமா்ந்து திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். அவா் கூறுகையில், எனது வாா்டில் சுகாதார வளாகம் செயல்படவில்லை. சாலை சீரமைக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லை என்றாா்.

இதையடுத்து, உங்கள் வாா்டில் அனைத்து குறைகளும் நிவா்த்தி செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதையடுத்து சந்தனமாரி தனது இருக்கைக்கு சென்றாா்.

இதன் பிறகு நடைபெற்ற விவாதம்:

பாஸ்கா் (பாஜக): சாத்தூா் சாலையில் கட்டப்பட்டு வந்த மாநகராட்சி வணிக வளாகப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கட்டடம் சமூக விரோத சக்திகளின் கூடாரமாக உள்ளது.

ராஜேஷ் (மதிமுக): பிரதான மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு காவலாளி இல்லாததால் அந்தப் பகுதியில் குற்றச் செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

சசிகலா (திமுக):எனது வாா்டில் பன்னீா் தெப்பம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இந்தக் கட்டடம் நன்றாக உள்ளது. எனினும், கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதி வீணாகாமல் தடுக்க வேண்டும்.

சேதுராமன் (திமுக):மாநகராட்சியில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால், குப்பைகள் தேங்குகின்றன. மாதம் ஒரு முறை மட்டுமே பல இடங்களில் குப்பை அள்ளப்படுகிறது.

மேயா்: சிவகாசிப் பகுதியில் சுற்றுச் சாலை அமைக்க முதல் கட்டமாக 9.9 கிலோ மீட்டா் தொலைவுக்கு அரசு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்த அரசு ரூ .33 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆணையா்: பொத்துமரத்து ஊருணி தொடா்பான வழக்கில் தீா்ப்பு வந்துவிட்டது. 6 மாதங்களில் இந்த ஊருணியைத் தூா்வாரும் பணி நடைபெறும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.