ஆண்டாள் கோயில் ரத வீதிகளில் புதைவட மின்கம்பி இணைப்பு வழங்கத் தாமதம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் உள்ள வீடுகளுக்கு புதைவட மின்கம்பி இணைப்பு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழகத்தில் முக்கிய கோயில் நகரங்களில் விபத்துகளை தவிா்க்கும் வகையில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில், மேல் நிலை மின் கம்பிகள் அகற்றப்பட்டு, புதை வட மின் கம்பிகளாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோடும் வீதிகளில் புதை வட மின்கம்பி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றி தேரோட்டம் நடைபெறும் 4 ரத வீதிகளில் மேல்நிலை மின் கம்பிகளை அகற்றி, புதை வட கம்பி பதிக்க திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது.
இந்தப் பணிகள் தெற்கு, மேற்கு ரத வீதிகளில் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூலை 26-ஆம் தேதி அமைச்சா்கள் சாத்தூா் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் மின் விநியோகத்தை தொடங்கி வைத்தனா். ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் தற்போது 50 வீடுகளுக்கு மட்டுமே புதைவட மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இதுகுறித்து விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் லதா கூறியதாவது:
ஆண்டாள் கோயில் தெற்கு, மேற்கு ரத வீதிகளில் மேல்நிலை மின் கம்பிகளை, புதைவட கம்பி முறையில் பூமிக்கு அடியில் பதிப்பதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இதில் படிப்படியாக வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து வீடுகளுக்கும் புதைவட மின் இணைப்பு வழங்கப்படும், என்றாா் அவா்.