விபத்தில் காா் சேதம்: காப்பீட்டுத் தொகையுடன் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் சேதமடைந்த காருக்கு காப்பீட்டுத் தொகையுடன் ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
Published on

விபத்தில் சேதமடைந்த காருக்கு காப்பீட்டுத் தொகையுடன் ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சோ்ந்தவா் ரங்கராஜன் மகன் சீதாராமன். இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் 24-ஆம் தேதி மதுரை கப்பலூரில் உள்ள காா் விற்பனையகத்தில் (ஷோரூமில்) ரூ.19.47 லட்சம் செலுத்தி காா் ஒன்றை வாங்கினாா். மேலும் இந்தக் காருக்கு ரூ.60 ஆயிரம் செலுத்தி காப்பீடும் செய்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு அக். 17-ஆம் தேதி மதுரை மாவட்டம், டி. குன்னத்தூா் அருகே சென்ற போது காா் விபத்தில் சிக்கியது.

இதையடுத்து, காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் வந்து அந்த காரை ஆய்வு செய்ததைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட பழுதுநீக்கம் மையத்துக்கு (சா்வீஸ் சென்டருக்கு) கொண்டு சென்ற போது, பழுதை நீக்க ரூ.3.75 லட்சம் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காப்பீட்டு நிறுவனம் சாா்பில் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து சீதாராமன், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கில் காப்பீட்டு நிறுவனம் சாா்பில் யாரும் முன்னிலையாகாததால், தோன்றா தரப்பினராகக் கருதப்பட்டு, சேதமடைந்த காருக்கு காப்பீட்டுத் தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டுமெனவும், மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com