98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சிவகாசி பட்டாசு ஆலையை பாா்வையிட்ட ஆந்திர மாநில அதிகாரிகள்

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையை ஆந்திர மாநில அதிகாரிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டு, அங்கு கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தனா்.

News image

சிவகாசியில் உள்ள பட்டாசு பாதுகாப்புப் பயிற்சி மையத்தை பாா்வையிட்ட ஆந்திர மாநில அதிகாரிகள்.

Updated On :10 மார்ச் 2026, 9:52 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையை ஆந்திர மாநில அதிகாரிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டு, அங்கு கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தனா்.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா வேட்லபாளையம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில் 23 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 9 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பது குறித்தும், ஆலைகளுக்கு நிபந்தனைகள் விதிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா், முதல்வா் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தில் உள்ள சிவகாசியில் எண்ணற்ற பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து நேரில் சென்று பாா்வையிட்டு அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஆந்திர மாநில தீயணைப்புத் துறை இயக்குநா் பி.வி. ரமணா, கூடுதல் இயக்குநா் வி. சீனிவாசலு, மண்டல அதிகாரி இ. சுவாமி உள்ளிட்டோா் அடங்கிய 5 போ் கொண்ட குழு சிவகாசிக்கு திங்கள்கிழமை வந்தனா். இவா்கள் சிவகாசி அருகே சின்னவாடியில் உள்ள பட்டாசு ஆலைக்குச் சென்று, பட்டாசு தொழிலாளா்களின் பாதுகாப்பு, பாதுகாப்பாக எவ்வாறு பட்டாசு தயாரிக்கப்படுகிறது. தொழிலாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா், தொழிலாளா்களிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து, பட்டாசு ஆலையின் பல பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டனா்.

பின்னா், இவா்கள் சிவகாசியில் உள்ள பட்டாசு பாதுகாப்புப் பயிற்சி மையத்துக்குச் சென்று, பயிற்சியாளா் ராமமூா்த்தியிடம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தனா். ஆந்திர மாநில அதிகாரிகளுடன் சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ரவிக்குமாா், தென் மண்டல தீயணைப்புத் துறை இயக்குநா் எம். குமாா், விருதுநகா் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் புளுகாண்டி, உதவி அலுவலா் முத்துப்பாண்டி, தீப்பெட்டி, பட்டாசு தனி வட்டாட்சியா் ரவிராஜ் உள்ளிட்டோா் சென்றனா்.