பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இளைஞா் காயம்
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

வெம்பக்கோட்டை அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள கங்கா்செவல்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (45). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை அந்தப் பகுதியில் உள்ளது. நாகபுரி உரிமம் பெற்ற இந்த ஆலையில் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகளைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், ஆலையில் உள்ள மூலப்பொருள்கள் வைக்கும் அறையில் வேதிப்பொருள்கள் அடங்கிய தகரப் பெட்டிகளை இறக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, வேதிப்பொருள்கள் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது.
இதில் சரக்கு ஏற்றி வந்த வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மூலப்பொருள்கள் வைக்கும் அறையும் தரைமட்டமானது. மேலும், அந்த அறையில் பணியில் ஈடுபட்டிருந்த நாரணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி புலித்துரை (25) பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, சக தொழிலாளா்கள் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறை அலுவலா் அழகுசாமி தலைமையிலான வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

