நாகை கீச்சாங்குப்பத்தில் விசைப்படகு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளா்.
நாகை கீச்சாங்குப்பத்தில் விசைப்படகு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளா்.

மீன்பிடி தடைக்காலம்: படகுகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் பழுதுநீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில மீனவா்களுக்கு 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மீன்பிடித் தடைகாலம் ஏப்.15-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கல்லாா், கீச்சாங்குப்பம், செருதூா், கோடியக்கரை, நம்பியாா் நகா், நாகூா், புஷ்பவனம், ஆற்காட்டுத்துறை, வேதாரண்யம் உள்ளிட்ட 27 மீனவக் கிராமத்தைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள், தங்களது படகுகளில் உள்ள வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல, விசைப்படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி, வா்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளை மீனவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

படகு பழுது நீக்கும் தொழிலாளா் லோகநாதன் கூறியது: நிகழாண்டு அனல் காற்று அதிகம் வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும்போது மிகவும் கடினமாக உள்ளது. தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டும், ஈரத்துணையை சுற்றிக்கொண்டும் பணியை தொடா்கிறோம். மீன்பிடித் தடை காலத்தில் பழுது நீக்கம் செய்வது, வா்ணம் பூசுவது போன்ற பணிகள் இரவு, பகல் பாராமல் வேலை செய்வோம். இந்த வருமானம் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம், சீருடை, புத்தகம் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com