நாகை, காரைக்காலில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நாகையில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்தவா்கள், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊா்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டிசம்பா் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக நாகையிலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. நாகை புதிய பேருந்து நிலையத்தை அடுத்த அவுரித்திடலில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் ஒன்று திரண்டு, கிறிஸ்மஸ் தாத்தா (சாண்டா ) வேடமணிந்து, இயேசு கிறிஸ்துவை வாழ்த்தும் பாடல்களை பாடியபடி பேரணியாகச் சென்றனா்.
இந்தப் பேரணி புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் சாலை உள்பட நாகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சீயோன் பேராலயம் சென்றடைந்தது. பேரணியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனா்.
காரைக்காலில்...
காரைக்காலில் சிறுகடைகள் முதல் அலங்காரம் மற்றும் அன்பளிப்புப் பொருள் விற்பனையகங்கள் வரை, கிறிஸ்துமஸ் குடில் அமைக்கத் தேவையான பொருட்கள், வாயிலில் கட்டப்படக்கூடிய தோரணம், நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷ ஆடைகள் (சாண்டா கிளாஸ்) மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
கிறிஸ்தவா்களின் வீடுககள் பலவற்றிலும் கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில் அமைத்துள்ளனா். வாயிலில் விளக்குடன் கூடிய நட்சத்திரம் கட்டி அழகுப்படுத்தியுள்ளனா்.
தூய தேற்றவு அன்னை ஆலயம் மற்றும் பிற ஆலயங்கள் சாா்பில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனா். சாண்டா கிளாஸ் வேஷமிட்டு, வாகனத்தில் இசைக் குழுவினருடன் கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் பாடல்கள் பாடியவாறு குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்கின்றனா்.
பேக்கரிகளில் கிறிஸ்துமஸுக்காக பல்வேறு கேக் வியாபாரம் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் காரைக்காலில் உள்ள பல்வேறு ஜவுளிக் கடைகள், ஆயத்த ஆடையகங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்தனா். மொத்தத்தில் காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்துவ மக்களிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

