வீடு கட்ட தரப்படும் மானியத் தொகையை பயன்படுத்தி கட்டாயம் வீடு கட்ட வேண்டும் என பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா என்ற வீடு கட்ட மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடு கட்ட ரூ. 2 லட்சம் மானியத் தொகை பல்வேறு தவணைகளாகத் தரப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில், வீடு கட்டுவதற்காக விண்ணப்பித்த பயனாளிகளுக்கு திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி திருநள்ளாறில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தொகுதிக்குள்பட்ட பயனாளிகள் 93 பேருக்கு திட்ட உதவியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வழங்கிப் பேசியது : குடிசை இல்லாமல் அனைவரும் கான்கிரீட் வீடுகளில் வசிக்க வேண்டும் என்ற வகையில், புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2004-15 -ஆம் ஆண்டு வாக்கில் நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, இந்த திட்டத்தின் மூலம் 150 பேருக்கு மானியம் வழங்கப்பட்டது. சுமார் 100 முதல் 120 பேர் மட்டுமே வீடு கட்டினர். மற்றவர்கள் வீடு கட்டாமல் விட்டுவிட்டனர். இதை அப்போது அரசுத் துறையினர் கேட்காமல்கூட இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம் மத்திய அரசுடையது. பல்வேறு விதிகளை ஒப்புக்கொண்டு மானியத்தை பெறுகிறீர்கள். வீடு கட்டப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும். எனவே, கண்டிப்பாக மானியம் பெற்றவர்கள் வீடு கட்டியாக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக கழிப்பறை இருக்க வேண்டும்.
வீடு கட்டுவதற்கு தரப்படும் நிதியைக் காட்டிலும் கூடுதலாக நிதி செலவாக வாய்ப்பிருக்கிறது. இதை வீட்டுக்குரியோர் பொருட்படுத்தாமல் செலவு செய்து வீட்டை கட்டி முடிக்க வேண்டும்.
இந்த நிதி, ஏழை முதல் பணக்காரர்கள் வரை கொடுத்த பல்வேறு வரியின் மூலம் கொடுக்கப்படுகிறது. மக்கள் இதை நன்கு மனதில்கொண்டு, நமக்கு சொந்த வீடு, கான்கிரீட் வீடாக அமைவதை எண்ணி பெருமிதம் கொண்டு வீட்டை கட்டி முடிக்க வேண்டும். வீடு கட்டத் தொடங்கியவுடன் அலுவலர்கள் வந்து பார்வையிட்டு, அடுத்தடுத்த தவணைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வர் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளர் ரவி, இளநிலைப் பொறியாளர் கோபிநாதன், ஏரியா ஆய்வாளர் மாரியப்பன், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.