திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு ராவண யுத்த நிகழ்ச்சி: திரளானோர்  பங்கேற்பு

ராமாயண  நிகழ்வுகள் காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினத்தில் சிவன் கோயில் சார்பில் ஜடாயு ராவண
Updated on
2 min read

ராமாயண  நிகழ்வுகள் காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினத்தில் சிவன் கோயில் சார்பில் ஜடாயு ராவண யுத்த நிகழ்ச்சியாக புதன்கிழமை இரவு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் திருக்கோயில்களுக்கு சிறப்பு பெற்ற திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீசுவரர் கோயில் உள்ளது. ராமாயணத்தில் வரும் கழுகு அரசனாகிய ஜடாயு, சிவபெருமானை வழிபட்டதன் வாயிலாக இக்கோயில் மூலவரான சிவலிங்கம் ஜடாயுபுரீசுவரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். 
ஆண்டுதோறும் 10 நாள் நிகழ்ச்சியாக பிரமோத்ஸவம் இக்கோயிலில் நடத்தப்படுகிறது. கொடியேற்றம் முதல் விடையாற்றி வரையிலான நிகழ்ச்சிகளில், இக்கோயிலில் ஸ்ரீ தியாகராஜராட்டமும், ஜடாயு சம்ஹாரமும் முக்கிய நிகழ்ச்சிகளாக கருதப்படுகிறது.
ராவணனை சம்ஹாரம் செய்து மாண்ட ஜடாயுவின் கதையை விளக்கும் வகையில், ஜடாயு ராவண யுத்தம் ஐதீக முறையில் ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படுகிறது. இக்கோயிலில்  ராவண யுத்த நிகழ்ச்சிக்கான ராமர், சீதை, லட்சுமணன், ராவணன், ஜடாயு என்கிற கழுகு, மான் உள்ளிட்ட பல்வேறு சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் அண்மையில் செய்யப்பட்டன. ஜடாயு ராவண யுத்த நிகழ்ச்சி புதன்கிழமை இரவு திருமலைராயன்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டது. இதையொட்டி சுமார் 2  மணி நேரம் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
முதலில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ராம, லட்சுமணனின் அழகில் மயங்கி ராவணனின் சகோதரி சூர்ப்பநகை அவர்களை அடைய முயற்சிக்கும் நிகழ்ச்சியும், இதனை வெறுத்த லட்சுமணன், சூர்ப்பநகையின் மூக்கை அறுத்து அனுப்புவதும், இதையறிந்த ராவணன், தமது மாமன் மாரீசனை மாயமானாக உருவெடுத்து அனுப்பும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மாயமான் அழகில் மயங்கி அதனை வேண்டி சீதை கோரியதை ஏற்று, ராமன் அதனை விரட்டிச் செல்வதும், மானிலிருந்து மாரீசன் வெளிப்படுவதும், சந்நியாசி கோலத்தில் வந்த ராவணன், தனியாக இருந்த சீதையை கொண்டுசெல்வதும், இதையறிந்து கழுகு அரசனாகிய ஜடாயு, 10 தலைகள் கொண்ட ராவணனின் தலைகளை ஒவ்வொன்றாக கொத்தி எடுப்பதும், இறுதியில் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஜடாயுவை ராவணன் கொல்வதும் தத்ரூப நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன. சீதையை காப்பாற்றிய ஜடாயுவுக்கு நன்றிக் கடனாக ராமரும், லட்சுமணனும் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்யும் நிகழ்ச்சி நடைபற்றது. இதைத் தொடர்ந்து  ஜடாயுவுக்கு மோட்சம் தரும் வகையில் சிறப்பு தீபாராதனையுடன் யுத்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ராமாயண நிகழ்வை விளக்கும் வகையில் நேர்முக வர்ணனை செய்யப்பட்டது. வைணவத் தலத்தில் நடக்கக்கூடிய இந்நிகழ்ச்சி சிவதலம் சார்பில் இவ்வூரில் நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. ராமாயன கதாபாத்திரங்கள் யாவும் இதில் உள்ளடக்கி, பெரிய விழாவாக கொண்டாடப்பட்டுவருவது, ஆண்டுதோறும் வெளியூர் மக்களையும் அதிகமாக ஈர்த்துவருகிறது. 
பல்வேறு சிவ தலங்களில் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவரும்வேளையில், சிவ தலத்தில்  ராவண யுத்தம் நடத்தப்படுவது தமிழகத்தில் பெரிதளவில் இல்லையெனவும், திருமலைராயன்பட்டினத்தில் மட்டுமே இவ்விழா சிறப்பாக நடத்தப்படுவதாக ஊர் பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்ட ஆராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி வீரச்செல்வம் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com