மாசி மகம்: டி.ஆர்.பட்டினத்தில் தீர்த்தவாரி

மாசி மகத்தையொட்டி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ  சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட 7 பெருமாள்  தீர்த்தவாரி நிகழ்ச்சி  வியாழக்கிழமை நடைபெற்றது.  
Updated on
1 min read

மாசி மகத்தையொட்டி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ  சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட 7 பெருமாள்  தீர்த்தவாரி நிகழ்ச்சி  வியாழக்கிழமை நடைபெற்றது.  
பவழக்கால் சப்பரத்தில் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு வெள்ளை மண்டபத்திலிருந்து  புறப்பாடானது. இவரைத் தொடர்ந்து திருமருகல் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ வீழிவரதராஜப் பெருமாள், ஸ்ரீ ரெகுநாத பெருமாள், நிரவியில் உள்ள ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள், கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராம பெருமாள் ஆகிய 7 பெருமாள்களும் மீனவ கிராமமான பட்டினச்சேரி வழியே கடற்கரைக்கு திரளான பக்தர்கள் சூழ சென்றனர். மீனவ கிராம மக்கள், கிராம எல்லையில் சுவாமிகள் நுழைந்ததும், சம்பிரதாய முறைப்படி பெருமாள்களை வரவேற்றனர்.
எல்லா பெருமாள்களும் தனித்தனி பல்லக்கில் இருந்தவாறு கடலில் இறங்கி மூன்று முறை சுற்றி பக்தர்களுக்கு தீர்த்தவாரி செய்தனர்.  தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கடலோரத்தில் கட்டுமரத்தை பந்தல் காலாக நட்டு பந்தல் போடப்பட்டிருந்ததில் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் இருந்த சப்பரம் இறக்கிவைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று  சுவாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து மாலை எல்லா பெருமாள்களும் திருமலைராயன்பட்டினத்தில் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மண்டபத்திற்கு எழுந்தருளினர்.   சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக வெள்ளை மண்டபத்தில் சுவாமி புறப்பாட்டின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், சார்பு ஆட்சியர் ஏ.விக்ராந்த் ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பவழக்கால் சப்பரத்தின் சிறப்பு : திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீற்று பவழக்கால் சப்பரத்தினுள் இருந்தவாறு கடற்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பவழக்கால் சப்பரத்தின் பகுதிகளில்  நெற் கதிர்கள் கட்டிவிடப்பட்டது. விவசாயம் செழிக்கவேண்டி இது காலம் காலமாக செய்யப்படுகிறது. சௌரிராஜப் பெருமாளை திருக்கண்ணபுரத்தில் உள்ள சேவகர்கள் சுமந்துகொண்டும், பவழக்கால் சப்பரத்தை பட்டினச்சேரி மீனவ இளைஞர்கள் சுமந்துகொண்டும், ஆக இவ்விரண்டையும் தனித்தனி குழுக்கள் சுமந்து கடற்கரைக்கு சென்றனர். சப்பரத்தினுள் பெருமாளை வைத்து  சப்பரத்தை பல முறை குலுக்கப்பட்டது. பெருமாள் இவ்வூருக்கு வந்தது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விளக்கும் வகையில் இது ஆண்டாண்டு காலமாக செய்யப்படுவதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் விவசாயம் செழித்துவருவதாக பக்தர்களின் நம்பிக்கை. மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் வம்சீதரரெட்டி, மாரிமுத்து ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com