/

அடிப்படை வசதிகளின்றி வாழும் குடும்பத்தினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்திப்பு

காரைக்கால் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பத்தினரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

Updated On :21 மே 2018, 7:25 pm

காரைக்கால் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பத்தினரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதிக்குள்பட்ட முக்கூட்டு ஆலமரம் என்கிற பகுதியில் குடும்பத்தினர் பலர் எந்தவித அடிப்படை வசதியுமின்றி வாழ்ந்து வருவதை அறிந்து, காரைக்கால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் மதியழகன் தலைமையில், பொருளாளர் பக்கிரிசாமி, கிளை செயலர் காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்றனர்.
அந்தப் பகுதியில் வாழும் குடும்பத்தினரைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து மதியழகன் கூறியது : நெடுங்காடு தொகுதி தனி தொகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது. நீண்ட காலம் அமைச்சர் தொகுதியாகவே விளங்கியதாகும். இந்த பகுதியில் பல கிராமப்புறங்களில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக முக்கூட்டு ஆலமரம் பகுதியில் 11 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திடலில் குடிசை அமைத்து வசிக்கத் தொடங்கினர்.
மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டியது அரசின் கடமை. ஆனால், இந்த பகுதியினர் கடந்த 15 ஆண்டுகளாக முறையாக சாலை வசதி, சாலையோர விளக்கு வசதி, குடிநீர் வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். குடியிருப்புக்கான மனைப் பட்டாவும் இவர்களிடத்தில் இல்லை. தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பலமுறை இதுகுறித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால், இவர்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் வகையில், புதுச்சேரி அரசின் கவனத்தை ஈர்க்க அந்த குடும்பத்தினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரை விரைவில் சந்திக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்த கட்சி தீர்மானித்துள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.