போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு விநாயகர் ஊர்வலம் இருக்க வேண்டும்: காவல்துறை அறிவுறுத்தல்
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என சிலை
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என சிலை ஊர்வல அமைப்பாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.
காரைக்கால் நகர பகுதியில் இந்து முன்னணி சார்பில் 52 விநாயகர் சிலைகள், விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜைக்காக வைக்கப்பட்டு சனிக்கிழமை கடலில் கரைப்பதற்காக ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சிலைக்கும், பொறுப்பாளர்களை நியமிக்குமாறு விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரை காவல்துறை கேட்டுக்கொண்டது. இதன்படி, சிலைக்கென அமைக்கப்பட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட இந்து முன்னணி தலைவர் கே.எஸ். விஜயன், காவல் ஆய்வாளர்கள் மர்த்தினி, சரவணன், உதவி ஆய்வாளர்கள் முத்துசாமி, மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி பேசியது :
விநாயகர் ஊர்வலத்துக்கு பொறுப்பாளர்கள் அனைவரும் காவல்துறையின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். பாரதியார் சாலையில் ஏழை மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், அதே சாலையில் பயணிப்பதால் போக்குவரத்து பாதிக்க நேரிடும். அதை சரிசெய்யும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்போது, ஊர்வல பொறுப்பாளர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் வாத்தியக் குழுவினர் நியமிக்கப்படும்போது, அந்த குழுவினர் சிலையுடன் சேர்ந்து செல்லும் வகையில் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தவொரு பகுதியிலும் நிற்காமல் செல்ல வேண்டும்.
சிலை அலங்காரத்தை அகலப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஊர்வலம் செல்லும் வழியில் மரக்கிளைகள் இடையூறாக இருப்பதாகக் கூறுவதை, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். வாத்தியக் குழுவினர் உள்ளிட்டோரை முறையாக வழிநடத்துவது சிலை பொறுப்பாளர்களின் பணியாகும். அதிகப்படியான சப்தத்தை தவிர்க்க வேண்டும். அனைத்து சிலைகளும் தொடர்ச்சியாக செல்ல ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பிரச்னைகள் ஏற்படும் விதத்திலான செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பலவேறு ஆலோசனைகளை அவர் கூறினார். பொறுப்பாளர்கள் சுமார் 150 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விநாயகர் ஊர்வலம் தொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் செய்தியாளர்களிடம் கூறியது:
சிலைகள் ஒவ்வொன்றும் 14 அடிக்குள்ளாக இருக்க வேண்டும். காலை 11 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் மாலை 6 மணிக்குள் முடிக்கவேண்டும் என பொறுப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்து. வாத்தியக் குழுவினர் உள்ளிட்டோர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளோம். போலீஸாருக்கு ஊர்வல பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். ஊர்வலக் குழுவினருக்கு எந்த பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோ, அதை கடைப்பிடிக்க வேண்டும். சனிக்கிழமை திருநள்ளாறு கோயிலுக்கு வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தில் அன்றைய நாளில் மாற்றம் செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







