காரைக்கால் கைலாசநாதர் கோயில் பிரமோத்ஸவத்தில் தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் விமரிசையாக நடத்த உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறக் கூடிய சிறப்புக்குரிய தலமாக ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் பிரமோத்ஸவமும், மாங்கனித் திருவிழாவும் புகழ்பெற்ற திருவிழாக்களாக உள்ளன.
பிரமோத்ஸவம் நடத்துவதற்காக நிகழ்ச்சிகளின் உபயதாரர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை கைலாசநாதர் அறங்காவல் நிர்வாகத்தினர் சனிக்கிழமை கூட்டினர். அம்மையார் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன் தலைமையிலான குழுவினரும், பிரமோத்ஸவத்தின் அனைத்து நிகழ்ச்சிகளின் உபயதாரர்களும், தேரோட்டத்தின் பங்களிப்பாளர்களாக உள்ள அனைத்து பிரிவினரும், இந்து முன்னணி அமைப்பினர், கோயில் அர்ச்சகர்கள் என சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறங்காவல் குழு செயலர் எம். பக்கிரிசாமி கூறியது : பிரமோத்ஸவத்தை நிகழாண்டு விமரிசையாக நடத்துவதற்கு அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக உபயதாரர்கள், கூட்டத்தில் பங்கேற்றோர் கூறினர். வரும் மார்ச் 4-ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து மார்ச் 8-ஆம் தேதி முதல் எல்லை தெய்வங்களுக்கு பூஜை நடைபெறவுள்ளது.
அடுத்து மார்ச் 12-ஆம் தேதி பிரமோத்ஸவ தொடக்கமாக கொடியேற்றம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, நாள்தோறும் சுவாமிகள் பல்வேறு வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. மார்ச் 20-ஆம் தேதி தேரோட்டமும், மார்ச் 24-ஆம் தேதி தெப்ப உத்ஸவமும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்றோர், பிரமோத்ஸவத்துக்கு அடுத்தப்படியாக நடைபெறக் கூடிய மாங்கனித் திருவிழாவில் பாரதியார் சாலையில் பந்தல் அமைப்பை அரசாணையாக பெறவேண்டும். மாங்கனித் திருவிழா பிச்சாண்டவர் புறப்பாடு நாளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்ற நிலை உள்ளது. இந்நாளில் அரசு பொது விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். அபிஷேகம் மற்றும் சுவாமிகள் அலங்காரத்தை முந்தைய காலத்தைப்போல அம்பாள் சன்னிதி முன்பாக நடத்தவேண்டும் என வலியுறுத்தினர். இவற்றை நிகழாண்டு முதல் நடத்துமாறு கேட்டுக்கொண்டனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








