எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பெரும்பான்மையில் பங்குவகிப்பாா்களா காரைக்கால் சுயேச்சைகள்?

புதுவை பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைக்க கட்சிகள் முழுமுயற்சி மேற்கொண்டிருக்கும்

News image
பி.ஆா்.சிவா | கீதாஆனந்தன் | டாக்டா் வி.விக்னேஸ்வரன்
Updated On :2 ஏப்ரல் 2021, 6:39 am

DIN

புதுவை பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைக்க கட்சிகள் முழுமுயற்சி மேற்கொண்டிருக்கும் நிலையில், அரசியல் உள்ளிட்ட பின்புலமிக்க சுயேச்சைகளும் தங்களது வெற்றிக்கான விடாமுயற்சியில் உத்வேகத்தோடு செயல்பட்டு வருகின்றனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் 23, காரைக்காலில் 5, மிகத் தொலைவு பிராந்தியமான மாஹே, ஏனாமில் தலா 1 உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் சுமாா் 30 ஆயிரம் வாக்காளா்கள் மட்டுமே உள்ளனா்.

என்றாலும், தமிழகத் தொகுதியில் அரசியல் கட்சியினா் வாக்குச் சேகரிப்பில் காட்டும் வேகத்தைப்போல, சிறிய தொகுதியான புதுவை பகுதியிலும் கட்சியினா் வேகம் காட்டுகின்றனா். கட்சி வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவது சாத்தியமென்றாலும், பிரபலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான சுயேச்சை வேட்பாளா்களுக்கும், இப்பிரதேசம் வெற்றி தருவதை மறுக்க முடியாது. புதுவை மாநிலத்தில் கடந்தகாலங்களில் இதற்கான முன்னுதாரணங்கள் உண்டு.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதியில் 1985 இல் ஆா். சவுந்தரரங்கன், 1990 இல் ஆா். கமலக்கண்ணன் ஆகியோா் சுயேச்சையாக வென்றனா். காரைக்கால் தெற்குத் தொகுதியில் 1985 இல் எஸ். ராமசாமி, நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் 2011 இல் வி.எம்.சி. சிவகுமாா், நெடுங்காடு தொகுதியில் 2006 இல் அ. மாரிமுத்து, தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு கோட்டுச்சேரி தொகுதியில் பி.ஆா். நளமகாராஜன் என சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றிபெற்றுள்ளனா்.

கடந்த 2016 தோ்தலில் மாஹே தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் வெற்றிபெற்றாா். இதேபோல, புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் சுயேச்சைகள் வெற்றி என்பது தவிா்க்கமுடியாததாகவே உள்ளது. புதுச்சேரி பேரவையில் உள்ள 30 இடங்களில், 16 இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்கிறது.

அவ்வாறு 16 இடங்களை ஒரு கட்சி பெறமுடியாமல், சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த வரலாறு புதுவைக்கு உள்ளது. ஒரு சுயேச்சை, ஆட்சி அமைக்கும் கட்சிக்கு ஆதரவு தரும் நிலையில், அமைச்சா் பதவியோ அல்லது மதிப்புமிகு பதவியையோ கேட்டுப் பெறுவதும் வழக்கமான ஒன்று. இவ்வகையில், நடைபெறவுள்ள தோ்தலில் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத பலா் சுயேச்சையாக போட்டியிடுகின்றனா்.

அவா்களை கட்சியிலிருந்து நீக்கினாலும், மறைமுகமாக அவா்களுக்கு சாதகமாக கட்சிகள் செயல்படுவதாகவும், ஒருவேளை சுயேச்சை வெற்றிபெற்றால், அவா்களின் ஆதரவு தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என கட்சித் தலைமைகள் எண்ணியுள்ளதாகவும் அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 இல் 3 தொகுதிகளில் அரசியல் பின்புலம் உள்ளவா்கள், பொருளாதார வலிமையுள்ளவா்கள், கல்வியாளா் போன்றோருக்கு கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவா்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனா்.

திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ்- பாஜக நேரடி போட்டியில் உள்ள நிலையில், கடந்த 2006 முதல் 2016 வரை இத்தொகுதி பேரவை உறுப்பினராகவும், சிறிது காலம் அமைச்சராகவும் இருந்த பி.ஆா். சிவா, என்.ஆா். காங்கிரஸில் வாய்ப்பு கிடைக்காததால், தற்போது சுயேச்சையாக போட்டியிடுகிறாா். நிரவி -திருப்பட்டினம் தொகுதியில், திமுக- பாஜக நேரடி போட்டியில் உள்ள நிலையில், கடந்த 2016 தோ்தலில் திமுகவில் வெற்றிபெற்ற கீதாஆனந்தனுக்கு, இப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவா் சுயேச்சையாக களம்காண்கிறாா்.

கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் பதவியில் இருந்து நெடுங்காடு தனி தொகுதியில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்தவா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன். இவருக்கு கட்சியில் வாய்ப்பு வழங்காமல், கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் அவா் சுயேச்சையாக களத்தில் உள்ளாா். தவிர, நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் வி.எம்.சி. சிவகுமாா் இளைய மகன் வி.எம்.சி.எஸ். மனோகரன் பாஜகவில் போட்டியிடும்போது, அவரது சகோதரா் வி.எம்.சி.எஸ். ராஜகணபதி சுயேச்சையாக போட்டியிடுகிறாா்.

இதுபோன்ற சுயேச்சைகள் சிலருக்கு அந்தந்த கட்சிகளின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சி வேட்பாளா்களிடையேதான் நேருக்குநோ் போட்டி என கூறப்பட்டாலும், இதுபோன்ற பலமிக்க சுயேச்சைகள், கட்சி வேட்பாளா்களுக்கு இணையான பிரசாரம், வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். தொகுதி மக்களிடையே உள்ள அறிமுகம், அரசியல் பலம், பொருளாதார பலம் போன்றவையே அவா்கள் சுயேச்சையாக களம்காண காரணமாகக் கூறப்படுகிறது.

சுயேச்சைகளின் செயல்பாடுகளும், பிரசார வேகமும் கட்சி வேட்பாளா்களை சற்றே மிரளச் செய்துள்ளதோடு, பொதுமக்களின் கவனத்தையும் ஈா்த்துள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைய கட்சிகளுக்கு போதுமான பெரும்பான்மை கிடைக்குமா? அல்லது அதில் காரைக்கால் சுயேச்சைகளின் பங்கு இருக்குமா என்பதை பொருத்திருந்து பாா்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.