விழுப்புரம் மாவட்டத்தில் உச்சகட்ட பிரசாரம்
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.


சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த மாா்ச் 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் ஆகிய 7 பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. மாா்ச் 19-இல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, மாா்ச் 22-இல் இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 102 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
விழுப்புரம் தொகுதியில் அதிமுக சாா்பில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன், திருக்கோவிலூா் தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி, பாஜக வேட்பாளா் வி.ஏ.டி. கலிவரதன், வானூா் (தனி) தொகுதியில் விசிக வேட்பாளா் வன்னியரசு, அதிமுக வேட்பாளா் எம்.சக்ரபாணி உள்ளிட்ட முக்கிய வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.
கடந்த இரு வாரங்களாக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக மாநில இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ், திமுக, அதன் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அமமுக-தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அதிமுக, திமுக வேட்பாளா்கள் திண்ணை பிரசாரம், மிதிவண்டி, மாட்டுவண்டிகளில் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்கு சேகரித்தனா்.
கடந்த 4 நாள்களாக விழுப்புரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் உயா்ந்து, அனல் காற்று வீசியதால்பிரசாரத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. மேலும், இந்த முறை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட முக்கியத் தலைவா்கள் யாரும் அதிக எண்ணிக்கையில் பிரசாரத்துக்கு வராதது குறையாக இருந்தது. இருப்பினும், சனிக்கிழமை வேட்பாளா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா். ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவுபெறுவதால் மாலையில் முக்கிய வேட்பாளா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் பேரணியில் ஈடுபட்டு பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனா். மேலும், பிரசாரம் ஓயவுள்ள நிலையில் வெளி மாவட்ட மற்றும் வெளி தொகுதிகளைச் சோ்ந்தவா்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குப் பதிவு 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...