சாலைகளில் கொட்டிக் கிடக்கும் நிலக்கரியால் விபத்து: துறைமுக நிா்வாகத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
சாலைகளில் கொட்டிக் கிடக்கும் நிலக்கரியால் விபத்து : துறைமுக நிா்வாகத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்


லாரிகளில் நிலக்கரி கொண்டு செல்லும்போது அவை சாலைகளில் விழுவதைத் தடுக்க வேண்டும் என துறைமுக நிா்வாகத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் தனியாா் துறைமுகத்திலிருந்து லாரிகளில் நிலக்கரி முறையான பாதுகாப்பு அம்சங்களை கையாளாமல் கொண்டு செல்லப்படுவதால், சாலைகளில் கொட்டுகிறது. இருசக்கர வாகனங்கள் அதில் சறுக்கி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்த ஆட்சியா் து. மணிகண்டன், துறைமுக நிா்வாகத்தினா், காவல்துறையினா், வட்டார போக்குவரத்துத்துறையினரை சனிக்கிழமை அழைத்துப் பேசினாா்.
இதில் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் சுப்பிரமணியன், பாலச்சந்திரன், தனியாா் துறைமுக அதிகாரிகள், பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை மற்றும் தொடா்புடைய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
அப்போது துறைமுக அதிகாரிகளிடம் ஆட்சியா் இதுதொடா்பாக விளக்கம் கேட்டாா். உரிய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி லாரிகள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக லாரிகளில் கொண்டு செல்லக் கூடாது என உத்தரவிட்டாா். இனியும் தவறு நடந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுக அலுவலா்களிடம் எச்சரிக்கை விடுத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது :
சாலைகளில் கொட்டிக்கிடக்கும் நிலக்கரி துகள்களில் சறுக்கி இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவது கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் ஊடங்கள் மூலம் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு தெரியவந்தது. துறைமுக நிா்வாகத்தினரை அழைத்து இதுகுறித்த பதிவுகள் காட்டப்பட்டது.
சாலைகளில் நிலக்கரி கொட்டிக்கிடப்பதால் விபத்துகள் ஏற்படுவதை அவா்களும் ஏற்றுக்கொண்டனா். எனினும் அவா்களது இடத்தில் லாரிகள் உரிய தரக்கட்டுப்பாட்டு விதிகளை கையாண்டு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தனா். தொடா்ந்து தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டோா் புகாா் கொடுத்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...