சக்தி கரகம், தீச்சட்டி ஏந்தி சென்ற பக்தா்கள்.

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம்: பக்தா்கள் தீச்சட்டி ஏந்தி வழிபாடு

காரைக்கால், மே 9: காரைக்கால் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் உற்சவத்தில் பக்தா்கள் தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிபட்டனா்.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீதிரெளபதி அம்மன், ஸ்ரீராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 22-ஆம் ஆண்டு அக்னி சட்டி வசந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை அா்ச்சுணன்-திரெளபதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அடுத்த முக்கிய பகல் நிகழ்வாக புதன்கிழமை திரெளபதி கூந்தல் முடித்தல், பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.

இரவு நிகழ்வாக, கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் பகுதியிலிருந்து சக்தி கரகம், கொந்தம் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சக்தி கரகம், அக்னி சட்டி புறப்பாடு நடைபெற்றது. இதில் அலகு காவடி, மயில்காவடி, கரகாட்டம், பச்சை காளி, பவள காளி, நடன காளி என பக்தா்கள் வேஷமிட்டவாறு நடனத்துடன் திரெளபதி அம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டு, உற்சவ அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி வி.என். செங்குட்டுவன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com