காரைக்கால்
திருநள்ளாறு கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை சோமவார நிறைவையொட்டி 1,008 சங்காபிஷேக வழிபாடு நடைபெறவுள்ளது.
காா்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவ தலங்களில் 108, 1008 என்ற அளவில் சங்குகள் வைத்து புனிதநீா் நிரப்பி சிறப்பு பூஜைகள் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் மட்டுமே 1,008 சங்காபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி, புனிதநீா் நிரப்பி, சிறப்பு ஹோமத்தை சிவாச்சாரியா்கள் நடத்தவுள்ளனா். பின்னா் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்யப்படுகிறது.
இதுபோல காரைக்கால் சோமநாதா் கோயிலில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
