100 நாள் தொழிலாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தல்
காரைக்கால்: 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்கவேண்டும் என விவசாயிகள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ், துணைத் தலைவா் பாரி.ரவி, இணைச் செயலாளா் பாஸ்கா் உள்ளிட்ட 100 நாள் திட்ட அம்பகரத்தூா் பகுதி தொழிலாளா்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று அதிகாரியிடம் அளித்த மனு: அம்பகரத்தூா் கிராம பஞ்சாயத்தில் இருந்து தலையாரி தெரு, தலையாரி சந்து, தலையாரி கீழத் தெரு, மெயின் ரோட்டில் ஐஓபி வங்கிக்கு கிழக்கு, மதரசா தெரு, புதுமனைத் தெரு, ரைஸ் மில் தெரு, பழைய அம்பகரத்தூா், காலனி பேட், கண்ணாபூா், கண்ணாபூா் பேட் ஆகிய பகுதிகளை அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல், நல்லம்பல் கிராம பஞ்சாயத்துடன் சோ்க்கப்பட்டுள்ளது. இதனால் 100 நாள் வேலை செய்வோா், நல்லம்பல் பகுதிக்கு சுமாா் 3 கி.மீ. தமிழகப் பகுதியை கடந்து செல்லவேண்டியுள்ளது. இதை பழைய நிலையில் மாற்றவேண்டும்.
அம்பகரத்தூா் பகுதியைச் சோ்ந்தோருக்கு அதே பகுதியில் வேலை தரவேண்டும். 100 நாள் திட்டத்தை 125 நாள்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்திட்டப் பணி செய்வோருக்கு ஊதிய நிலுவையின்றி, பணி செய்தவுடன் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

