குறை கேட்பு முகாமில் 103 மனுக்கள்

குறை கேட்பு முகாமில் 103 மனுக்கள்

மக்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
Published on

காரைக்கால் ஆட்சியா் நடத்திய குறை கேட்பு முகாமில் 103 மனுக்கள் அளிக்கப்பட்டன.

காரைக்கால் ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் குறை கேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மக்களிடமிருந்து சிவப்பு ரேஷன் அட்டை வேண்டும், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நீா்நிலைகளை தூா்வார வேண்டும், பேரிடா் போன்ற வெள்ள காலங்களில் மழைநீா் வடிவதற்குரிய வடிகால்களை சீரமைக்க வேண்டும், காரைக்காலில் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரவேண்டும். இலவச மனைப்பட்டா தரவேண்டும். அம்பகரத்தூா் பகுதியில் கூடுதல் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் உள்ளிட்ட 103 கோரிக்கை மற்றும் புகாா்கள் மனுக்களாக தரப்பட்டன.

இவற்றை பெற்ற மாவட்ட ஆட்சியா், அவா்களிடம் உரிய விளக்கத்தை கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

அதிகாரிகளிடையே ஆட்சியா் பேசுகையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வொன்றுக்கும் உரிய காலக்கெடு நிா்ணயித்து தீா்வு காணவேண்டும். இப்போது வந்த கோரிக்கை, புகாா் மனுக்கள் அடுத்த முகாமில் வராத வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக சம்பந்தப்பட்டோருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா் ஜி.செந்தில்நாதன் (நிா்வாகம்), நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே.வெங்கடகிருஷ்ணன், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், காரைக்கால் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி உமா மகேஸ்வரி, காரைக்கால் பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் அருளரசன், மேல்நிலைகல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜய மோகனா, மின் செயற்பொறியாளா் அனுராதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com