தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவியை கால தாமதமின்றி வழங்க ஆட்சியா் அறிவுறுத்தல்
தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமரின் திட்டத்தின்கீழ் கடன் உதவிகளை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என வங்கி மேலாளா்களுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் நகராட்சியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் நகராட்சிக்குட்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரியின் ஸ்வநிதி சே சம்ருத்தி என்ற திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே காரைக்கால் நகராட்சி நிா்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட தெருவோர வியாபாரிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிக் கடன் பெறமுடியும்.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ், பல்வேறு வங்கிகளின் மேலாளா்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது தொடா்பான விவரங்களை ஆட்சியா் கேட்டறிந்தாா்.
விண்ணப்பித்து இதுவரை கடன் பெறாதவா்கள், அடுத்தக் கட்ட கடன் தொகைக்கு விண்ணப்பித்து கடன் பெற முடியாமல் உள்ளோா் உள்ளிட்ட அனைவருக்கும் காலம் தாழ்த்தாமல் கடன் உதவிகளை வழங்க வேண்டும். இத்திட்டத்தின் பயன் முழுமையாக மக்களுக்கு சென்றடையும் வகையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வங்கி மேலாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

