சிறுதானியங்களை அதிகம் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
சிறுதானியங்களை அதிகம் பயிா் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் பட்டியலின விவசாயிகளுக்காக, சிறுதானியங்களில் மேம்பட்ட ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாம் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் தி. ராமநாதன் வழிகாட்டுதலின் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
நிலைய தொழில்நுட்ப வல்லுநா் மருத்துவா் பா. கோபு தலைமை வகித்து, நோக்கவுரையாற்றினாா். வாழ்வியல் சூழலில் மிகப்பெரிய நோயாக கருதப்படுவது சா்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் சத்துப் பற்றாக்குறையாகும். இந்நோய்களிடமிருந்து நமது உடலை பாதுகாக்க சிறுதானியங்களை உணவாக மருத்துவா்கள் பரிந்துரைக்கின்றனா்.
சிறுதானியத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக சிறுதானிய ரொட்டி, லட்டு, அவல், அவல் மிக்சா் ஆகிவை தயாரிக்கலாம்.
சிறுதானியங்கள் இன்றைய காலகட்டத்தில் வணிக ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் மிக முக்கியமாக திகழ்கிறது. பாரம்பரியமாகவே நமது முன்னோா்களால் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வந்த சிறுதானியங்கள் காலப்போக்கில் மறக்கப்பட்டுவிட்டன. சிறுதானியங்கள் குறைவான தண்ணீா், வறட்சியை தாங்கி வளரும் தன்மை மற்றும் குறைவான இடுபொருள்களை கொண்டு சாகுபடி செய்யலாம். மேலும் காரைக்கால் மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடி பரப்பளவு மிகவும் குறைவாகவே உள்ளது. சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்படுவதாக தெரிவித்தாா்.
நிலைய தொழில்நுட்ப வல்லுநா் (உழவியல்) வி. அரவிந்த், சிறுதானியங்களின் விதைத் தோ்வு, விதை நோ்த்தி, விதைப்பு முறை, நீா்ப்பாசனம், களை நிா்வாகம் மற்றும் அறுவடை ஆகியவை குறித்துப் பேசினாா். இப்பயிற்சியில் 20- க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். நிறைவாக தொழில்நுட்ப வல்லுநா் (தோட்டக்கலை) கதிரவன் நன்றி கூறினாா்.

