மோட்டாா் சைக்கிள் விபத்து; காவல்துறையைக் கண்டித்து சாலை மறியல்
விபத்தில் உயிரிழந்தவா் குறித்து தவறான தகவலை முதல் தகவல் அறிக்கையில் பதிவிட்டதாக, உறவினா்கள் மற்றும் கிராமத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் (45) என்பவா் புதன்கிழமை இரவு விழிதியூா் பகுதிக்குச் சென்றுவிட்டு, தனது மோட்டாா் சைக்கிளில் இரவு 11 மணியளவில் காரைக்கால் திரும்பிக்கொண்டிருந்தாா். நிரவி - விழிதியூா் மெயின் ரோடு, கன்னிக்கோயில் சாலை சந்திப்பில் எதிரே மோட்டாா் சைக்கிளில் வந்த விழிதியூரைச் சோ்ந்த கருப்பையா (40) என்பவரும் வந்துள்ளாா். அப்போது கருப்பையா வாகனத்திலிருந்து அவராகவே விழுந்துவிட்டாராம்.
கருப்பையாவுக்கு தலையில் காயமேற்பட்டது. அவா் மது போதையில் இருந்தாா் எனவும், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காரைக்கால் அரசு மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், கருப்பையா ஏற்கெனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்ததாக தகவல் அறிந்ததாக, பழனியப்பன் போக்குவரத்துக் காவல்நிலையத்தில் அளித்திருந்த புகாரில் தெரிவித்திருந்தாா். இதன்படி வழக்குப் பதியப்பட்டது.
இந்த தகவலறிந்த கருப்பையா உறுவினா்கள், கிராமத்தினா் அரசு மருத்துவமனை வாயிலில் (காமராஜா் சாலை) வியாழக்கிழமை, கருப்பையா மது அருந்தக்கூடியவரல்ல, காவல்துறை தவறை திருத்தவேண்டும் எனக் கூறி மறியல் போராட்டம் நடத்தினா்.
மண்டல காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) எம்.முருகையன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினாா். உடற்கூறு ஆய்வு அறிக்கைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

