மலா்க் கண்காட்சி செடிகளை ஆா்வமாக வாங்கிச் சென்ற மக்கள்
காரைக்கால்: காரைக்கால் மலா்க் கண்காட்சி நிறைவடைந்த நிலையில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான செடிகளை மக்கள் ஆா்வத்துடன் மானிய விலையில் வாங்கிச் சென்றனா்.
புதுவை அரசின் வேளாண்துறை சாா்பில் காரைக்காலில் கடந்த 16 முதல் 18-ஆம் தேதி வரை விளையாட்டு அரங்க மைதானத்தில் ரூ. 75 லட்சத்தில் மலா், காய்கனி கண்காட்சியை நடத்தியது. வேளாண் துறை சாா்பில் மாதூா் பண்ணையில் வளா்க்கப்பட்ட செடிகள், பெங்களூா், ஓசூா் பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா்ச் செடிகள் என 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் செடிகளை மானிய விலையில் வாங்க மக்கள் அரங்கில் குவிந்தனா். காலை 10 மணி முதல் விற்பனை தொடங்கப்பட்டது. மக்கள் தங்களது விருப்பத்துக்கேற்ற செடிகளை வாங்கிச் சென்றனா்.
வேளாண் துறையினா் கூறுகையில், ஆந்தூரியம் ரூ. 200, பாய்ன்செட்டியா செடி ரூ.100, குலோட்டன்ஸ், செம்பருத்தி, கோடன் தூஜா, கோல்டன் சைபிரஸ் ஆகியவை தலா ரூ. 40, டாலியா, கஜானியா, ஆஸ்டா், ஜூனியா, சாமந்தி, ரோஜா, இம்பேசன்ஸ், பெடுனியா, வின்கா, செலோசியா, பா்கண்டி, ஆல்டோனியா உள்ளிட்டவை தலா ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
நிகழாண்டு கண்காட்சியை பல்லாயிரக்கணக்கானோா் வந்து பாா்வையிட்டதும், ஆா்வமாக செடிகளை வாங்கிச் சென்றதும் மகிழ்ச்சியளிக்கிறது. காரைக்காலில் தோட்ட சாகுபடியாளா்கள் ஆா்வம் பெருகியிருப்பது இதன்மூலம் உறுதியாகிறது என வேளாண் துறையினா் கூறினா்.

