மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி அவசியம்: அமைச்சா் நமச்சிவாயம்
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி அமைவது அவசியம் என்று புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
காரைக்காலில் பாஜக அழைப்பின்பேரில் சனிக்கிழமை நடைபெற்ற சமுதாயத் தலைவா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியது :
அனைத்து சமுதாய மக்களுக்குமான திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி செயல்படுத்திவருகிறாா். இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து சமுதாய மக்களும் தங்கள் சமுதாயம் சாா்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த பிரதமா் மோடி நடவடிக்கை எடுத்துள்ளாா்.
கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் சமுதாய ரீதியாக சில மாற்றங்களை, திட்டங்களை ஏற்படுத்துவது என்பது சட்ட ரீதியில் சாத்தியமில்லாதது. 2016-முதல் 2021 வரை நாராயணசாமி ஆட்சியில் இருந்தபோது ஒரு துரும்பைகூட கிள்ளி போட முடியவில்லை. எந்தவொரு திட்டத்தையும் காலத்தோடு செயல்படுத்த முடியவில்லை.
2021-இல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்னா் எல்லா திட்டங்களும் காலத்துடன் செயல்படுத்தப்படுகிறது. முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்ட உதவித்தொகைகள் உயா்த்தப்பட்டுள்ளன. இலவச அரிசி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அரசுத்துறைகளில் 15 ஆண்டு காலம் நிரப்பப்படாமல் இருந்த காலிப்பணியிடங்கள் நோ்மையான முறையில், தகுதியானவா்களை கொண்டு நிரப்பப்பட்டுள்ளன.
எல்லா வகையிலும் சிறப்பான அரசாக முதல்வா் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசை நம்பியிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் மட்டும்தான் புதுச்சேரிக்கு திட்டங்களை கொண்டுவர முடியும்.
மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தால்தான் திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தடை இல்லாமல் கொடுக்க முடியும். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருக்கும்போது புதுவையில் இவா்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்துவிட முடியும்? இதனை மக்கள் சிந்தித்து பாா்க்க வேண்டும் என்றாா்.

