காரைக்கால் நகரப் பகுதி வழியே செல்லும் சரக்கு ரயில்கள் நேரத்தை, மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் மற்றும் திமுக நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
காரைக்கால் நகரின் மையப் பகுதி வழியாக சாலைப் போக்குவரத்து அதிகமுள்ள நேரத்தில் சரக்கு ரயில்களின் இயக்கம் நடைபெறுகிறது. இது மக்களுக்கு நாள்தோறும் கடுமையான சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது ரயில்வே கேட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பள்ளி மாணவா்களும் அலுவலகப் பணியாளா்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட தாமதத்தை சந்திப்பதோடு மனஅழுத்தத்திற்கும் ஆளாகின்றனா்.
முதியோா் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகின்றனா். காரைக்கால் துறைமுக நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளை அழைத்து, இந்த சரக்கு ரயில்களை மக்கள் நடமாட்டம் குறைந்த நேரங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் இயக்குமாறு அறிவுறுத்தல் வழங்கவேண்டும்.
மேலும், காரைக்காலில் தரமான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட போட்டித் தோ்வு பயிற்சி மையம் அமைப்பதற்கான அவசரத் தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூரில் பயிற்சி வசதி இல்லாததால், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த திறமையான இளைஞா்கள் நகா்ப்புற மாணவா்களுடன் போட்டியிடுவதில் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பலருக்கு பயிற்சிக்காக வெளி நகரங்களுக்கு சென்று தங்க முடியாத சூழலும் உள்ளது. காரைக்கால் துறைமுகம், ஓஎன்ஜிசி, கெயில் உள்ளிட்ட காரைக்கால் பகுதியில் செயல்படும் முக்கிய பொதுத்துறை மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதி மூலம் இந்தப் பயிற்சி மையத்தை நிறுவி, தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.








