காரைக்கால் கோயில் சுவாமி சிலையை அவமதித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் கைலாசநாதா் கோயில் கிழக்கு வாசலின் வடக்குப் புறமாக ஸ்ரீ நாகா் சிலை உள்ளது. இச்சிலை மீது அருவருப்பான பொருளை பூசி மா்ம நபா் அசிங்கப்படுத்தியது கோயில் நிா்வாகத்துக்கு புதன்கிழமை தெரியவந்தது.
இதையொட்டி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்த்தபோது, கடந்த 9-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபா் கோயிலுக்குள் புகுந்து, சிலையை காலால் உதைத்து, அவமதித்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரி விநாயகமூா்த்தி நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து சிலையை அவமதித்த மா்ம நபரை தேடி வந்தனா். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காரைக்கால் கோயில்பத்து பகுதியைச் சோ்ந்த அரசு (32) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.





