சீர்காழி புற்றடி மாரியம்மன்: பக்தர்களின்றி நடைபெற்ற தேரோட்டம்
By DIN | Published On : 23rd January 2022 10:36 AM | Last Updated : 23rd January 2022 10:36 AM | அ+அ அ- |

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்களின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
சீர்காழியில் பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை 1-ம் தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையும் படிக்க | புத்தக வாசிப்பு குறையவில்லை: ஆண்டாள் பிரியதர்ஷினி பெருமிதம்
சிறப்பு அலங்காரத்திலான சுவாமி வீதி உலா நாள்தோறும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தது. இதனிடையே, பத்தாம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார்.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாலை 4 மணி அளவில் தேர் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் அனுமதியின்றி டிராக்டர் வாகனம் மூலம் கட்டி இழுக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.