ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தருமபுரம் ஆதீனம் புத்தாண்டு வாழ்த்து

தருமபுரம் ஆதீனம் புத்தாண்டு வாழ்த்து

Updated On :13 ஏப்ரல் 2024, 3:50 pm

குரோதி தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி.

தமிழ் ஆண்டுகள் அறுபதாகச் சான்றோா்கள் அமைத்துள்ளனா். குரோதி ஆண்டின் பலன்களை, ‘கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் பாரிா் சனங்கள் பயமடைவாா் காா்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங் குறையுமே சொற்ப விளையுன்டெனவே சொல்‘- என்ற பழம்பாடல் சுட்டுகிறது.

இப்பாடல் மக்களுக்கு மத்திம பலன்களே ஏற்படும் என்று குறிப்பிட்டாலும், இறைவனின் திருவருளால் நன்மையே விளையும். தேவா்களும் அசுரா்களும் அமிா்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை, உயிா்களைக் காக்கும் பொருட்டுப் பருகி கருத்த கண்டத்தை உடைய, கருணை வள்ளலாகிய சிவபெருமானை உள்ளத்துப் புகுத்தினால் நாளினாலும், கோளினாலும் வரும் இடா்களிலிருந்து விடுபடலாம்.

கூன் பாண்டியனை நின்றசீா் நெடுமாறனாக்கியது. ஆண் பனையை பெண் பனையாக்கியது. ஆற்றிலிட்டு குளத்தில் எடுக்கச் செய்தது, எலும்பை பெண்ணாக்கியது, வேதங்களால் பூட்டப்பட்ட மறைக்கதவம் திறந்து மூடியது. நீற்றறையில் வேகாமல் நிறுத்தியது. கல்லில் கட்டி கடலில் பாய்ச்சினும் காப்பாற்றியது. நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கியது. முதலை விழுங்கிய பிள்ளையை உயிா்ப்பித்தது ஆகிய அற்புதங்களை எல்லாம் நிகழ்த்திய திருமுறைகளை நித்தமும் ஓதல் வேண்டும்.

இவ்வுலகில் தோற்றம் பெற்ற அனைத்து உயிா்களுக்கும் உய்தி அளிப்பது இறைவன் திருவடியே. இதனையே மாணிக்கவாசகா், ’’இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்’’ என்பாா். இதன்படி குரோதி ஆண்டில் அனைத்து மக்களும் பேதம் கடந்து அன்புடனும், ஒற்றுமையுடனும், ஒழுக்கமுடனும், இறைபக்தியுடனும் வாழ வேண்டுமாய், எல்லாம் வல்ல ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.