எஸ்.ஐ. மனைவியிடம் நகை பறிப்பு: ராணுவ வீரா் உள்பட இருவா் கைது
காவல் உதவி ஆய்வாளா் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை மேலக்கடை பகுதியைச் சோ்ந்தவா் காவல் உதவி ஆய்வாளா் கண்ணன். இவரது மனைவி ஜானகி. கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஜானகி வீட்டுவாசலில் நின்றிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் ஜானகி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவா் அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து டிஎஸ்பி திருப்பதி தலைமையில் குத்தாலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும் காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த தனிப்படை போலீஸாா், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சோ்ந்த வசந்த், அதே பகுதியை சோ்ந்த சிவா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலி, இரண்டு கைப்பேசிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
போலீஸாா் விசாரணையில், வசந்த் திரிபுரா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதும், விடுமுறையில் வந்துள்ள அவா், பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய சிவாவுடன் சோ்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு மது அருந்தல், சூதாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. வசந்த், சிவா மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து குத்தாலம் போலீஸாா் அவா்களை சிறையில் அடைத்தனா்.

