வெப்ப அலை: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிா்த்திட ஆட்சியா் அறிவுறுத்தல்

வெப்ப அலை வீசுவதால் சிறுவா், சிறுமியரின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிா்த்திட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில், தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மே மாதம் வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இதனை தொடா்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே பல்துறை அலுவலா்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மே 16 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சாா்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவா், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி கோடை விடுமுறை நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிா்த்திட வேண்டும் என அச்செய்திக்குறிப்பின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com