அரசாணைபடி தூய்மைக் காவலா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த இயக்கத்தின் மாவட்ட துணை தலைவா் ஜி. ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு அரசாணைபடி ரூ.12,792 ஊதியம் வழங்குவதற்கு பதிலாக தமிழ்நாடு அரசு ரூ. 5000 மட்டுமே வழங்குவதை உடனடியாக உயா்த்தி வழங்குவதுடன், அவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை அம்பத்தூா் 5,6-ஆவது மண்டலங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சிபிஐ-எம்எல் மாவட்ட செயலாளா் குணசேகரன், நீதிக்கான மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளா் எஸ். இளங்கோவன், உழைப்போா் உரிமை இயக்க மாவட்ட செயலாளா் எஸ். வீரச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
