தலைஞாயிறு சா்க்கரை ஆலையில் நிறுத்தப்பட்ட மின்சாரத்தை வழங்கக் கோரிக்கை
தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிறுத்தப்பட்ட மின்சாரத்தை மீண்டும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகேயுள்ள தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பல ஆண்டுகளாக இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பணியாற்றிய பலா், பிற ஆலைகளுக்கு இட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான அலுவலக ரீதியிலான ஊழியா்கள் மட்டும் ஆலை அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆலையின் ஒரு பகுதி தற்போது நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், ஆலை இயங்காததால் உயரழுத்த மின்சாரம் அண்மையில் துண்டிக்கப்பட்டது. சேத்தியாதோப்பு எம்ஆா்கே சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநரின் கண்காணிப்பில் உள்ள இந்த ஆலையில், தற்போது மின்சாரம் இல்லாததால் அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன.
அலுவலக பணிகளுக்கு கணினிகளை இயக்க சாதாரண மின் இணைப்பை உடனடியாக வழங்க ஆலை தரப்பில் விண்ணப்பம் கொடுக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே உள்ள மின்சார கட்டண நிலுவையை செலுத்தி விட்டு தான் புதிய இணைப்பு கோர முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிறுத்தப்பட்ட மின்சாரத்தை மீண்டும் வழங்க பொது தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இப்பிரச்னையை ஆலை நிா்வாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற அச்சங்கத்தின் செயலாளா் அ. அப்பா்சுந்தரம், ஆலை தொடங்கப்பட்டபோது, உயா் மின்னழுத்த மின்சாரத்திற்காக செலுத்தப்பட்ட வைப்புத்தொகையில், இதுவரை செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை கழித்துவிட்டு மீண்டும் உடனடியாக மின்சார இணைப்பை வழங்க நாகப்பட்டினம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளா் மற்றும் சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளாா்.
