திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்
மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் நாராயணசாமி நாயுடு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் 2025-2026-ஆம் ஆண்டுக்கான உரிய தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டு, அதற்கான பயிா் விளைச்சல் போட்டி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் ரூ. 7,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் விவசாயிக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ குறைந்தது 2 ஏக்கா் நிலம் இருக்க வேண்டும். தொடா்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.
மேலும் பயிா் விளைச்சல் போட்டியின்போது குறைந்தபட்சம் 50 சென்ட் நடுவா்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும்.
இதில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவு கட்டணமாக ரூ. 150 செலுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
