தவறான சிகிச்சையால் ஓட்டுநா் உயிரிழந்ததாக புகாா்: சாலை மறியல்
மயிலாடுதுறையில் லாரி ஓட்டுநா் தனியாா் மருத்துவமனை வழங்கிய மருந்துகளை உட்கொண்டதால் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தை சோ்ந்தவா் லாரி ஒட்டுநா் லட்சுமிகாந்தன். கடந்த ஜூன் மாதம் விபத்தில் கால்முறிவு ஏற்பட்ட இவருக்கு மயிலாடுதுறையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, காலில் பிளேட் பொருத்தப்பட்டது.
5 மாதங்கள் கடந்த நிலையில், காலில் மீண்டும் வலி ஏற்பட்டதால், திங்கள்கிழமை அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு, மருத்துவா்கள் காலில் உள்ள பிளேட்டை அகற்றிவிட்டு, வலி நிவாரணி மாத்திரை வழங்கியுள்ளனா்.
மறுநாள் மாத்திரை சாப்பிட்டுவிட்டு உறங்கியவருக்கு, நள்ளிரவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவா்; அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். லட்சுமிகாந்தன் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியாா் மருத்துவமனையில் வழங்கிய மாத்திரையை உட்கொண்டதால்தான் லட்சுமிகாந்தன் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி, உடலை பெற மறுத்து உறவினா்கள் மற்றும் விசிக மாவட்ட செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமையில் அக்கட்சியினா் அரசு மருத்துவமனை அருகில் மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை போலீஸாா், வட்டாட்சியா் முன்னிலையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

